பாடியே பரனை துதி மனமே

பல்லவி

பாடியே பரனை துதி மனமே, துதி மனமே
கொண்டாடி துதி தினமே (2)

சரணங்கள்

1. சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்த
நாதனை துதி மனமே
நாளுக்கு நாளாய் செய்பல நன்மைக்காய்
நாதனை துதி மனமே
ஆதரவாய் எம்மை காத்ததினாலே
தேவனை துதி மனமே --- பாடியே

2. நானில தனிலெம் பாவங்கள் போக்கிய
நாதனை துதி மனமே
என்றும் எம்மேல் வைத்த மாறிடா அன்பிற்காய்
நாதனை துதி மனமே
கானகமதிலே ஜீவ ஊற்றான
தேவனை துதி மனமே --- பாடியே

3. கிருபையாய் ஈந்த திருப் பலிக்காக
நாதனை துதி மனமே
கோரமாய்வந்த நோய்களைத் தீர்த்ததால்
நாதனை துதி மனமே
தாபரமாய் எம்மை தாங்கியதாலே
தேவனை துதி மனமே --- பாடியே

4. கஷ்டமானாலும் நஷ்டமானாலும்
நாதனை துதி மனமே
பஞ்சம் பசியுடன் பங்கம் வந்தாலும்
நாதனை துதி மனமே
ஜீவனானாலும் மரணமானாலும்
தேவனை துதி மனமே --- பாடியே

5. ஏகமாய் எம்மை அன்பினால் இணைத்த
நாதனை துதி மனமே
அகமதை ஆவியால் ஆலயமாக்கிய
நாதனை துதி மனமே
தூதரிலும் எமை மேன்மையாய் எண்ணிய
தேவனை துதி மனமே --- பாடியே

6. உன்னத அழைப்பால் எம்மையே தெரிந்த
நாதனை துதி மனமே
பெலமுள்ள கரமதில் செங்கோலுமாக்கிய
நாதனை துதி மனமே
நீடூழி காலமாய் சாலேமில் வாழ்ந்திடத்
தேவனை துதி மனமே --- பாடியே