அதிகாலையிலுமைத் தேடுவேன்

பல்லவி

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

அனுபல்லவி

இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! --- அதிகாலை

சரணங்கள்

1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! --- அதி

2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? --- அதி

3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
புகழார நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! --- அதி