வரவேணும் எனதரசே,
மனுவேல், இஸரேல் சிரசே.
அருணோ தயம் ஒளிர் பிரகாசா,
அசரீரி ஒரே சரு வேசா!
1. வேதா கருணா கரா, மெய்யான பரா பரா,
ஆதார நிராதரா, அன்பான சகோதரா,
தாதாவும் தாய் சகலமும் நீயே;
நாதா, உன் தாபரம் நல்குவாயே. --- வரவேணும்
2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,
முடியாதருள் போசனா, முதன் மா மறைவாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய். --- வரவேணும்
3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே,
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா,
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! --- வரவேணும்